ஏகலைவன்
பாபு அண்ணன் துபாயில் இருந்து வேலை நிமிர்த்தமாக சென்னை வருகிறார் என்ற செய்தி கேட்ட உடன் மோகன் மிகவும் பரவசம் ஆனான். அவனது நினைவுகள் 10 ஆண்டுகள் பின் நோக்கிச் சென்றது.
மோகன், பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான், அப்போது தான் பாபுவுடன் அவன் முதல் சந்திப்பு ஏற்பட்டது. அது பொங்கல் விடுமுறை. பொங்கல் கொண்டாடுவதற்காக மோகன் பாட்டி வீட்டுக்கு போவது வழக்கம், அந்த ஆண்டும் சென்றான். அங்கு தான் அவன் பாபுவை சந்தித்தான். பாபு அவனுடைய அத்தை வழி தூரத்து உறவு. அந்த ஆண்டு பாபுவும் பொங்கல் கொண்டாடுவதற்காக அங்கு வந்திருந்தான்.
பாபு, பார்த்த உடன் அனைவரையும் வசீகரிக்க வைக்கும் புன்னகை. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ளும் தன்மை. அவனது சகாக்களுடன் அவன் செய்யும் சில்மிஷம் என்று அப்போதே அங்குள்ள அனைவருடனும் நன்கு நெருங்கி விட்டான். அன்று மாலை மோகன் அவனுடைய மாமன் மகன், சித்தி மகன், பெரியம்மா மகன் என்று தன்னுடைய சகாக்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். பாபு அவர்களுக்கு இடையில் நுழைந்தான். விடுகதைகளுடன் ஆரம்பித்தான் அவனுடைய வேடிக்கையை. அனைத்தும் புத்திசாலித் தனமான, எளிமையான விடுகதைகள். பிறகு நம்பர் விளையாட்டு, கால்குலேட்டர் வித்தைகள், சினிமா, அறிவியல் என அனைத்து துறைகளைச் சார்ந்த விளையாட்டை சிறுவர்களுக்கு மத்தியில் அறிமுகப் படுத்தி, அந்த மாலை அவன் அங்கு இருந்த சிறுவர்களின் நாயகனாக திகழ்ந்தான். மோகன் முற்றிலுமாக பாபுவின் அறிவாற்றலை கண்டு வியந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த அவனது மாமன் "பாபு அண்ணனை போல சி.ஏ படித்தால் நீங்களும் பெரிய ஆடிட்டர் ஆகலாம். நீங்களும் இந்த மாதிரி வித்தைகள் எல்லாம் செய்லாம்" என்றார். அப்போதே பாபுவை நாயகனாக பார்த்துக்கொண்டிருந்த மோகன், மாமனின் வார்த்தைகளை கேட்டு, பாபுவின் வெற்றிக்கு அவன் படிப்புத்தான் காரணம் என்று தீர்கமாக நம்பினான்.
அன்று இரவே அத்தையிடம் பாபுவை பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டான் மோகன். பாபு, 12-ம் வகுப்பில் 3-ம் குரூப் ஆனா அக்கௌண்டன்ட் படித்து விட்டு, வசதி இன்மையின் காரணத்தால் ஒரு ஆடிட்டரிடம் வேலைக்கு சேர்ந்து, அஞ்சல் வழியாக பி.காம் முடித்து, பிறகு சி.ஏ செய்து அப்போது ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் துணைத்தலைமை ஆடிட்டராக வேலை செய்துகொண்டிருந்தான். பாபுவை பற்றின அனைத்து நினைவுகளும், விபரங்களும் மோகனின் மனதில் ஆழப்படிந்தது.
விடுமுறை முடித்து ஊருக்கு சென்ற மோகன் தனது 10-ம் வகுப்பு தேர்வு நெருங்கியதால் முழு கவனத்தையும் தேர்வில் செலுத்தினான். தேர்வில் 95% மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்வு பெற்றான். அவனுடைய வெற்றியை கண்டு பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் பாராட்டினர். நீ பெரிய மருத்துவராகவோ, பொறியியல் வல்லுனராகவோ வருவாய், 12-ம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதப் பிரிவான முதல் குரூப் படி என அறிவுறுத்தினர். அவனது பள்ளி அவனுக்கு முதல் குரூப் இலவச கல்வி கொடுக்கக் கூட தயாராக இருந்தது. அனால் சிறுவன் மோகனின் மனதில் தெரிந்த ஒரே பாதை 3-ம் குரூப் >>>பி காம் >>>சி.ஏ >>>ஆடிட்டர்.
மோகன் அவனது 3-ம் குரூப் படிப்பதற்கான விருப்பதை பெற்றோர்களிடம் சொன்ன போது அவர்கள் அதிர்ந்தனர். தனது மகன் பெரிய மருத்துவராகவோ , பொறியியல் வல்லுனராகவோ வருவான் என நினைத்த அவர்களுக்கு மோகனின் விருப்பம் ஏமாற்றம் தந்தது . ஆனால் மகனின் விருப்பதிற்கு மதிப்பு கொடுத்து 3-ம் குரூப்பில் சேர்க்க முடிவு செய்தனர் . அந்த ஊரில் அக்கல்விக்கு தேர்ந்த பள்ளி எதுவும் இல்லாத காரணத்தால் , அவனை சென்னையில் உள்ள அக்கல்வியில் தேர்ந்த பள்ளியில் சேர்த்தனர். பாபு அண்ணன் > 3-ம் குரூப் > பி காம் > சி.ஏ > ஆடிட்டர் என மோகன் தனது குறிக்கோளில் உறுதியாக இருந்தான் . அவன் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தினான் . வருடங்கள் கடந்தன , அவ்வப்போது உற்றார் உறவினர்களின் மூலம் பாபு அண்ணனை பற்றின தகவல் அவன் காதில் வந்து சேரும் . பாபு மலேசிய சென்றுவிட்டான் , அமெரிக்க சென்று விட்டான் , பிரான்ஸ் சென்றுள்ளான், என கேட்கும் போதெல்லாம் அவன் குறிக்கோள்கலை உயர்த்திக்கொண்டே போனான் மோகன் . இதற்கிடையில் மோகன் 3-ம் குரூப் முடித்து , பி.காம் முடித்து சென்னையில் தலைசிறந்த ஆடிட்டரிடம் சேர்ந்து சி.ஏ-ம் முடித்தான் . என்ன ஆச்சர்யம் சி.ஏ முடித்தவுடன் அவனுடைய நாயகனை சந்தித்த போது அவன் எந்த நிறுவனத்தில் துணைத்தலைமை ஆடிட்டராக இருந்தானோ அதே நிறுவனத்தில் மோகனுக்கு வேலை கிடைத்தது.
மோகன் அவனது குறிக்கோளின் முதல் படியை அடைந்த ஆனந்தத்தில் இருந்தான் . மலேசிய >>>அமெரிக்கா >>>பிரான்ஸ் >>>துபாய் என அவனுடைய பாதை எப்போதும் பாபுவை நினைவு படுத்திக் கொண்டே இருந்தது . இப்போது 3 ஆண்டுகள் முடிந்து விட்டது , அவன் அதே நிறுவனத்தின் ஒரு பிரிவிற்கான தலைமை ஆடிட்டர் அளவுக்கு உயர்ந்து விட்டான் . இப்போது மோகனுடைய நடை , உடை , பாவனை , மற்றவர்களை வசீகரிக்கும் முறை என அனைத்திலும் 10 வருடத்திற்கு முன் நாயகன் பாபுவை விட ஒரு படி மேலேறி நின்று இருந்தான்.
10 ஆண்டுகள் கழித்து நாளை தனது நாயகனை சந்திக்க போகிறோம் என்ற குதுகலத்தில் இருந்தான் . பாபு அண்ணனிடம் நடந்த அனைத்தையும் கூறி விட வேண்டும் என்ற ஆவல் அவனை பற்றிக்கொண்டது . இந்த சந்திப்பால் அவனுடைய குறிக்கோள்களின் அடுத்த படிகளை கடக்க தன் நாயகன் உதவி செய்வான் என்று பல கற்பனைகளுடன் அந்த இரவு அவனுக்கு சிவராத்திரியாக இருந்தது.
அந்த திங்கட்கிழமை காலை எழுந்து அவன் வேக வேகமாக தன்னை தயார் செய்து கொண்டு அவனுடைய ஆசை வண்டி பல்சரில், பாபு தங்கியுள்ள 3 நட்சத்திர விடுதி நோக்கி புறப்பட்டான். வழி முழுவதும் 10 வருடத்திற்கு முன் பார்த்த பாபுவை நினைவு படுத்திக்கொண்டே சென்றான் . இப்போதும் அதே புன்னகையுடன் தன்னை வரவேற்று பல விதத்தில் ஆச்சர்ய படுத்த போகிறார் என்ற கற்பனையுடன் விடுதியை வந்தடைந்தான்.
இப்படி பல கற்பனைகளுடன் சென்ற மோகன் பாபுவின் அறைக் கதவை தட்டினான் . கதவு திறந்தது, ஆம் பாபுவே தான், ஆனால் பாபுவை அந்த கோலத்தில் பார்த்த மோகனின் மனது சுக்கு நூறாக உடைந்தது. அவன் கற்பனையின் 1% கூட ஒட்டாத மாற்றம். சோர்ந்த முகம், சுருங்கிய தோல், கூன் விழுந்த தோற்றம் என அவன் வயதுக்கு மிஞ்சிய முதிர்ச்சி. இத்தனைக்கும் மேல் பாபுவின் முகத்தில் ஒரு வித ஏமாற்றமும், ஏக்கமும் கலந்திருந்தது. "வாப்பா மோகன், எப்படி இருக்கிற? சின்ன பையனா பார்த்தேன், ரொம்ப மாறிட்டியே" என்று மோகனை பார்த்த சின்ன மகிழ்ச்சி தெரிந்தது. மோகன் அவனுடைய சிறு வயது நாயகனின் இந்த நிலையை கண்ட அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாய் "நான் நல்லா இருக்கிறேன் ...ணா, நீங்க எப்படி இருக்கிறீங்க?" என்று மெல்லிய குரலில் கேட்டான். " நான் நல்லா இருக்கேன்பா" என்று அவன் சொன்ன விதத்திலேயே ஒரு சோகம் தெரிந்தது. மோகன் அவனுடைய உணர்ச்சிகளை கட்டு படுத்திக்கொண்டு ஒரு சிறிய போலிப் புன்னகையுடன் "நீங்களும் ரொம்ப மாறிட்டீங்கண்ணா" என்றான். அதற்க்கு பாபுவிடமிருந்து ஒரு சிறிய புன்னகை மட்டுமே பதிலாக கிடைத்தது.
"சரிப்பா, இப்ப நீ என்ன பண்ற" என்று மிகுந்த அக்கறையுடன் விசாரித்தான் பாபு. மோகன் மிகவும் வேகமாக "மாதவன் இண்டஸ்ட்ரீஸ்ன் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைமை ஆடிட்டராக இருக்கிறேன்". என்றான். இதை கேட்ட பாபுவின் முகத்தில் மிகுந்த மகிழ்ச்சி தெரிந்தது. உடனடியாக "அப்படியாப்பா, சந்தோசமா இருக்கு. உன்னை நினைத்து எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. இந்த வயசுல எவ்வளவு பெரிய சாதனை பண்ணி இருக்குற". என்றான். பாபுவின் மகிழ்ச்சியை பார்த்த மோகன் மீண்டும் மலர்ந்தான். இந்த அனைத்திற்கும் நீங்கள் தான் காரணம், உங்களைப் போலவே நான் இன்னும் மேலே மேலே வளரனும் என்று அனைத்தையும் சொல்லி விட வேண்டும் என துடித்தான். ஆனால் அதற்க்கு முன் " ம், நானும் அதே நிறுவனத்தில் இருந்திருந்தால் இந்நேரம் ஒரு நல்ல நிலைமையில் இருந்திருப்பேன். அதை விட்டு அங்க போறேன், இங்க போறேன், அத பண்றேன், இத பண்றேன்னு வழக்கை எப்படி எப்படியோ போயிட்டது. நீயும் என்ன மாதிரி ஆயிடதே. நீ நல்லா வளரனும்." என்ற பாபுவின் வார்த்தைகளை கேட்டு இடிந்து போனான் மோகன். ஏனோ இதயம் முழுவதுமாக கனத்தது.
பாபுவின் இன்றைய நிலயை கண்டு வருந்துவதா, தன்னுடைய குறிக்கோள்களே இடிந்து போய், இருண்டு போன தன் நிலயை கண்டு வருந்துவதா என்று, என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியை காத்தான். இன்னும் ஒரு நொடி கூட அந்த இடத்தில இருக்க முடியாதென்பதை உணர்ந்தான், "எனக்கு அலுவலகத்திற்கு நேரம் ஆகுது நான் கிளம்பறேன்" என்று வேகமாக எழுந்தான். "ஒரு நிமிஷம் இருப்பா" என்ற பாபு ஒரு பெட்டியை திறந்து உறவினர்களுக்கு பரிசாக கொடுப்பதற்காக துபாயில் இருந்து வாங்கி வந்த சன் கிளாஸ் ஒன்றை மோகனுக்கு கொடுத்தான். மிகவும் சிரமப்பட்டு ஒரு சிறிய புன்னகையை அவன் முகத்தில் வர வழைத்துக்கொண்டு அதை பெற்றுக் கொண்டான். "நன்றி" என கூறி வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.
முதல் முறையாக அவன் இதயத்தில் பாரத்தை உணர்ந்தான். உலகமே இருண்டு தெரிந்தது. அவனுடைய ஆசை கண்ணாடியான ரேபானை சட்டை பையில் போட்டுக்கொண்டு, பாபு கொடுத்த சன் கிளாஸ் மாட்டிக்கொண்டு அலுவலகத்தை நோக்கி புறப்பட்டான் பல்சரில். சற்றும் எதிர் பாரத ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாதவனாய் ஒரு மயக்கத்திலே வண்டியை நடத்தினான். சாலையின் மேடு பள்ளங்களை கவனிக்காமல் ஒரே வேகத்தில் வண்டியை நடத்தினான். அந்த அதிர்வில் அவன் சட்டை பையில் இருந்த ஆசைக் கண்ணாடி ரேபான் எகிறி கீழே விழுந்தது. அதை உணர்ந்த மோகன் சற்று வண்டியை ஓரம் நிறுத்தி பின்னே பார்க்கும் போது , பின்னால் வந்த ஒரு காரின் சக்கரம் ஏறி கண்ணாடி சுக்கு நூறாக உடைவதை பார்த்தான். உடைந்த கண்ணாடியை பார்த்த மோகனின் கண்களில் ஒரு தெளிவு தெரிந்தது. பாபு கொடுத்த கண்ணாடியை மீண்டும் மாட்டிக்கொண்டு அலுவலகம் நோக்கிப் புறப்பட்டான். இப்பொழுதும் பாபு அவனுக்கு ஆசானாகவே தெரிந்தான்.
Comments
word verification எடுத்துவிடுங்கள்