பிஞ்சில் நஞ்சு
'யாருப்பா இது?' வீட்டுக்கு புதிதாக வந்திருக்கும் சிறுவனைப் பார்த்து அப்பாவிடம் கேட்டான் சிறுவன் ராமு. 'ராமு இவன்தான் குமார். இன்னைல இருந்து நம்ம மண்டில பொட்டலம் போட வந்திருக்கான்.' என மகனுக்கு அறிமுகம் செய்து வைத்தான் வெங்கடேசன். மிஞ்சிப் போனா ராமுவை விட 2 வயது அதிகமாக இருக்கும் அந்த சிறுவனுக்கு. நேற்று தான் ராமுவின் பத்தாவது பிறந்தநாள் கொண்டாடப் பட்டது. ராமுவைப் பார்த்து வெள்ளந்தியாக புன்னகைத்துக் கொண்டிருந்தான் அந்த அரை நிஜார் போட்டிருந்த சிறுவன் குமார். ராமுவும் பதிலுக்கு புன்னகைத்தான்.
'யாரு இந்தப் பையன் புதுசா இருக்கான். நம்ம தெருவுல பார்த்ததில்லையே?' கேட்டுக் கொண்டே பூஜை அறையில் இருந்து வெளியே வந்த பாட்டியிடம், 'பாட்டி, இவன் பேரு குமார். நம்ம மண்டில வேலை செய்ய வந்திருக்கான்.' வேகமாக அவனுக்கு தெரிந்ததை சொன்னான்.
பாட்டி வெங்கடேசனை பார்க்க, 'நம்ம நெத்திலி தர்மலிங்கம் இருக்காரு இல்ல, அவரோட பேரன் மா. இவனோட அப்பன் வந்து இவனுக்கு வேலை ஏதாவது இருந்தா போட்டுக் கொடுக்க சொன்னான்.' அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே. 'டேய், என்ன டா இப்படி பண்ணிட்டே.' பதட்டப் பட்டவள் அந்த சிறுவனைப் பார்த்து 'டேய் தம்பி கொஞ்சம் வெளிய போய் நில்லுடா. இனிமே வீட்டுக் குள்ள எல்லாம் வரகூடாது சரியா' என்றால். முகத்தில் இருந்த புன்னகை சிறிதளவும் சிதையாமல் லேசாக தலையை ஆட்டிவிட்டு வெளியே போனான் குமார். மகன் வெங்கடேசனைப் பார்த்து 'இத பாருடா, வேலைக்குதன வந்திருக்கான், அவன மண்டியோட வெச்சிக்கோ. வீட்டுக்குள்ள விடற வேலை எல்லாம் வெச்சுக்காத. ஐயோ, இன்னைக்கு சனிக்கிழமை வேற. ஏழுமலையானே...' என சொல்லி விட்டு வாய்க்குள்ளே ஏதோ மந்திரந்தை முனுமுனுத்தாள். 'சரிம்மா இனிமே அவன் உள்ள வராம பாத்துக்கறேன் போதுமா.' சமாதானப் படுத்தினான்.
'மகா, நான் மண்டிக்கு கிளம்பறேன். மதியம் வர தாமதமாகும் எனக்காக காத்திருக்காத.' மனைவியிடம் சொல்லிவிட்டு, 'வரேன்ம்மா' தாயிடமும் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தான். நடந்ததை எல்லாம் வீட்டு திண்ணையில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ராமு, 'டாட்டாப்பா, வரப்ப தர்பூசணி பழம் வாங்கிட்டு வாப்பா' என சொல்லி தந்தையை வழி அனுப்பினான். 'சரிடா' என டிவிஎஸ்-50 யில் ஏறின வெங்கடேசன். வண்டிக்கு அருகிலே நின்றிருந்த குமாரை பார்த்து 'மண்டிக்கு வழி தெரியும் இல்ல?' புன்னகை மாறாத முகத்துடன் தெரியும் என்பது போல் தலை ஆட்டினான். 'சரி அங்க வந்திடு' சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினான். வண்டி கிளம்பிய அடுத்த வினாடியே அதே திசையை நோக்கி குமாரும் ஓடத் துவங்கினான். வண்டியில் அப்பாவும், பின்னால் குமார் ஓடிப் போவதையும் ராமு தெருவுக்கு வந்து, பார்வையில் இருந்து அவர்கள் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்.
வீட்டுக்குள்ளே வந்த ராமு, நேராக பாட்டியிடம் சென்றான். 'ஏன் பாட்டி குமார வீட்டுக்கு வெளில போய் நிற்க்கச் சொன்னே?'
'அவங்கெல்லாம் ஹரிஜன மக்கள் டா, நம்ம வீட்டுக்குள்ளே எல்லாம் வரக் கூடாது.'
இந்த 20 ம் நூற்றாண்டு இறுதியில் அப்படி ஒரு சொல்லை அவன் கேட்டதே இல்லை, 'ஹரிஜன மக்களா. அப்படின்னா?'
'இங்க வா சொல்றேன்' என அவனை பக்கத்தில் உட்க்கார வைத்துக்கொண்டு விளக்க ஆரம்பித்தால். 'சாமி மனிதர்களை படைச்சப்ப 4 விதமா உருவாக்கினாறு. முதல்ல பிரமணர்களை அவரோட தலைல இருந்து படைச்சாரு. இவங்க சாமிக்கு நெருக்கமா அவருக்கு பணிவிடை செய்றவங்க. பக்கத்து வீட்டு ஐயர் மாமா மாதிரி. இரண்டாவதா சத்ரியர்கள அவரோட மார்ல இருந்து படைச்சாரு. இவங்க மனித குளத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாத்துரவங்க. நம்ம எல்லைச் சாமி இருக்காரு இல்ல அவரு மாதிரி. மூனாவதா வைச்யர்களை அவரோட வயித்துல இருந்து படைச்சாரு. இவங்க வணிகம் செய்யறவங்க. நம்ம மாதிரி. கடைசியா சூத்திரர்களை அவரோட கால்களில் இருந்து படைச்சாரு. இடுப்புக்கு கீழ இருந்து படைச்சதால இவங்கள கீழ் தட்டு மக்கள்ன்னு கூட சொல்லுவாங்க. இவங்கள தான் நாம இப்ப ஹரிஜன மக்கள்ன்னு கூப்பிடறோம். இவங்களோட வேலை முடி வெட்டறது, செருப்பு தைக்கறது, கழிவுகளை கழுவர்துன்னு மூன்றாம் தர வேலைகளை செய்யறதும் அதனால நம்ம சுற்றுப்புறத்தை சுத்தமா வெச்சிக்கறதும் தான். இவங்க எப்பவுமே நமக்கு கீழ தான். நம்ம வீட்டுக்குள்ள எல்லாம் வரக் கூடாது.'
இதுநாள் வரை நமது புராணங்களில் உள்ள நல்லா நெறிகளை மட்டுமே சொல்லிக் கொடுத்தவள் முதல் முறையாக அந்த பிஞ்சு மனதில் நஞ்சை கலந்தாள் அந்தப் பாட்டி.
'பார்த்தவுடனே ஹரிஜன மக்கள்னு எப்படி கண்டுபிடிக்கறது பாட்டி?'
'ஒரு காலத்துல ரொம்ப சுலபமா கண்டுபிடிச்சிடலாம். இதோ இப்ப ஒரு பையன் வந்தானே அவங்க தாத்தா தர்மலிங்கம், உங்க தாத்தா மண்டியில தான் கூலி வேலை செஞ்சிகிட்டு இருந்தான். உங்க தாத்தாவை அவன் தலை நிமிர்ந்து கூட பார்த்தது கிடையாது. இடுப்புல ஒரு துணிய சுத்திக்கிட்டு தலைய குனிஞ்சி தான் பேசுவான். கொஞ்ச நாள் கழிச்சி அவன் சொந்தமா ஒரு பெட்டிக் கடைய நடத்த ஆரம்பிச்சிட்டான். ஆனா அப்ப கூட உங்க தாத்தாவ நிமிர்ந்து பார்த்து பேச மாட்டான். அவங்க ஜனம் எல்லாரும் அப்படித்தான் இருந்தாங்க. அதனால ரொம்ப சுலபமா அவங்கள கண்டுபிடிச்சிடலாம். ஆனா இப்ப பகுத்தறிவு அது இதுன்னு சொல்லி அவங்கள எல்லாம் பெரிய ஆள் ஆக்கிட்டாங்க. இந்த காலத்துல அவங்களா சொன்னாத்தான் உண்டு, இல்லைன்னா கண்டுபிடிக்கறது கடினம் தான்.'
ராமு, அம்மா அப்பாவின் ஒரே செல்லப் பிள்ளை என்ற போதிலும், அவன் வளர்ப்பில் பெரும் பகுதி பாட்டிக்கு உண்டு. அவனுக்கும் பாட்டி என்றாம் ரொம்பப் பிரியம். அவனுக்கு இரவில் கதை சொல்லி தூங்க வைப்பது, பாட்டு சொல்லிக் கொடுப்பது, அம்மா அவனை திட்டும் போது ஆறுதல் சொல்லி அரவணைப்பது, விடுமுறை நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவது என பேரனுக்கு மிகுந்த பாசத்தை கொட்டி வளர்த்தால். எந்த நேரத்திலும் அவனுக்கு நல்ல விஷயங்களையே கற்றுக்கொடுத்தவள், முதல் முறையாக இப்படி ஒரு விஷ விதையை அவன் மனதில் விதைத்து விட்டால்.
காலம் ஓடியது. குமார் வெங்கடேசனுக்கு விசுவாசமாகவும், அவன் நம்பிக்கைக்கு பாத்திரமானவனுமாக தொழிலில் பக்க பலமாகவும் இருந்து வந்தான். வெங்கடேசனும் அவனை நல்ல முறையிலேயே நடத்தி வந்தார். சொல்லப் போனா குமாரின் சிரித்த முகமும், கூர்மையான அறிவுத் திறனும் தன் வியாபார விருத்திக்கான முக்கிய காரணமாக கூட கருதினான்.
அவ்வப்போது மண்டிக்கு வரும் ராமு, குமாரிடம் இருந்து தள்ளியே இருந்தான். டீ-காப்பி வாங்கிவர, சைக்கிள்-பைக் துடைக்க மட்டுமே அவனிடம் வேலை வாங்குவான். எவ்வளவு வளர்ந்த போதிலும் ராமு சொல்லும் வேலைகளை எல்லாம் சிறிதளவும் முகம் சுழிக்காமல் செய்து முடிப்பான் குமார்.
கல்லூரி படிப்பிற்காக வெளியூர் சென்ற ராமு படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கினான். அனைவரிடமும் நன்கு பழகும் குணமுடையவன் ராமு. இருந்தும் அதில் யாராவது ஹரிஜன மக்களில் ஒருவர் என தெரிய வந்தால் அவர்களை விட்டு விலகியே இருப்பான். 'அனைத்து மனிதர்களும் சமம்', அதுவே மனிதநேயம் என்று அறிவுப்பூர்வமாக அறிந்த போதும், அவன் மனம் அதை ஏற்க்க மறுத்தது. சிறு வயதில் அவன் மனதில் ஆழமாக பதிந்துப் போன அந்தச் சம்பவமே அதற்க்கு காரணம்.
அந்த காலகட்டத்தில் ஒருநாள் மாடிப் படி ஏறும்போது பாட்டி கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டாள். சேதி கேட்டு ராமு பதறிப் போனான். தேர்வு நேரம் என்பதால் அவனால் ஊருக்கு வர இயலவில்லை. அவன் இயலாமையை நினைத்து மிகவும் வருந்தினான்.
தந்தையிடம் தொலைபேசியில் பேசினான், 'பாட்டிய யாருப்பா பாத்துக்கறாங்க?'
'நம்ம குமார் தான் டா'
'என்ன குமாரா? வேற யாருமே கிடைக்கலையா?' என ஆவேசப்பட்டான்.
'இல்ல ராமு, பாட்டியால நடக்க முடியலப் பா. அவங்களோட தினசரி குளியலறை, கழிவறை வேலைக்கெல்லாம் அவங்களை கைத்தாங்களா அழைச்சிகிட்டு போக வேண்டி இருக்கு. சில சமயம் தூக்கிட்டு போக வேண்டிய நிலைமை கூட இருக்கு. உனக்கே தெரியும் பாட்டியோட பாரத்தை தாங்குற அளவுக்கு எனக்கோ உங்கம்மாவுக்கு பலம் இல்லை. அதுக்குத்தான் ஒரு ஆயாவ வெச்சோம். ஒரு மணி நேரம் கூட இல்ல, என்னால முடியாதுன்னு அவளும் போய்ட்ட. நம்ம குமார் அவனே வந்து நான் பாத்துக்கறேன், நீங்க கவலை படாதீங்கண்ணேனு சொன்னான். பாட்டிக்கு தேவையானதை எல்லாம் அம்மா பாத்துக் கிட்டாலும். அவங்கள கைத்தாங்களா கூட்டிப் போகவோ, அவங்கள சுத்தி சுகாதரமா பார்த்துக்கவோ குமார் தான் உதவியா இருக்கான்.'
பாட்டி சொன்ன விஷயம் தான் அவன் நினைவிற்கு வந்தது 'சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யறது அவங்க வேலை'. குமார் சரியான வேலையை தான் செய்கிறான் என மனதை தேற்றிக்கொண்டு, 'சரிப் பா அவனே பார்த்துக்கட்டும்.' என சொல்லி முடித்தான்.
குமாரின் அக்கறை மிகுந்த கவனிப்பால் சில மாதங்களில் பாட்டி பூரணமாக குணமடைந்தால். நன்கு குணமடைந்த போதிலும் பாட்டியிடம் இருந்த பழைய உத்வேகம் இல்லை. எப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கும் பாட்டி, பன்மடங்கு பேச்சை குறைத்து விட்டால். முகம்மும் எப்பொழுதும் வாடியே இருந்தது.
அவ்வப்போது ஊருக்கு வரும் ராமு, பாட்டிக்கு தக்க சமயத்தில் தேவையான மருந்துகளை கொடுப்பது, மருத்துவரிடம் அழைத்துச் செல்வது என அவன் இருக்கும் சமயத்தில் தேவையான பணிவிடைகளை செய்வான். பாட்டியிடம் தென்பட்ட மாற்றத்தை எல்லாம் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் ராமு. அடி பட்டதிலிருந்து பாட்டி உடல் ரீதியாக மிகவும் பலவீனம் அடைந்துவிட்டால் என மிகவும் வருந்தினான்.
இப்படியே சில வருடங்கள் ஓடியது. குமாருக்கு திருச்சி கம்பெனியில் ஆபரேடர் வேலை கிடைத்தது. 'நான் கொடுப்பதை விட 3 மடங்கு சம்பளம், 2 வேலை சாப்பாடு, இருக்க இடம், இதை விட நல்ல வாய்ப்பு உனக்கு கிடைக்காது. விட்டு விடாதே' என சந்தோஷமாக அனுப்பி வைத்தான் வெங்கடேசன். 'உனக்கு வேலை பிடிக்கலன்னா, எப்ப வேணும்னாலும் திரும்ப மண்டிக்கே வந்திடு' என சொல்லியும் அனுப்பினான்.
ராமு கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இந்திய அகழ்வாராய்ச்சி துறையில் துணை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்தான். ஒரு நாள் அவன், வேலப்பாடி என்ற ஊரில் இருந்து கிடைத்த கல்வெட்டு ஒன்றை ஆராய்ந்து கொண்டிருந்தான். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்டது. ஆராய்ச்சியின் முதல் படியாக, அதில் செதுக்கி இருந்த பாடலை படித்தான்.
சிரத்தில் பிறந்தோன்
விலாவில் பிறந்தோன்
வயிற்றில் பிறந்தோன்
வாழ வழி தேடி
நின்னடி யடையப் பிறந்தனை
தைத் திரு ஞாயிறு
அறத்துப் பால் நின்று
அவனடி தொழுதோனே மேலோன்
அவனே நின்பாத மடைவான்
அஃதிலார் இறையடி சேராதவர்
பாடலைப் படித்த அவன் நிலை குலைந்துத் தான் போனான். (பாடலின் பொருள் அறியவேண்டும் என்றால் கதையின் இறுதிப் பகுதியை பார்க்க) எவ்வளவு ஆழமான அர்த்தம். வேதங்களையும், திருக்குறளையும் நன்கு கற்றறிந்த ஒருவரால் மட்டுமே இப்பாடலை இயற்றி இருக்க முடியம் என எண்ணினான். இதை யார் எழுதி இருப்பார் என்பதை அறியும் ஆவலை விட, இப் பாடல் இத்தனை நூற்றாண்டுகளாக மனித குலத்துக்கு தெரியாமலேயே போய் விட்டதே என வருந்தினான். முன்பே பெற்றிருந்தால் மனிதர்களுக்கு இடையே மேல் தட்டு மக்கள், கீழ் தட்டு மக்கள் என்ற பேதமே இருந்திருக்காதே. இத்தனை நாள் அவன் நடந்து கொண்ட விதத்தை நினைத்து வெட்கப் பட்டான். இத்தகவலை உடனே பாட்டிக்கு சொல்ல வேண்டும் என துடித்தான். நினைத்த நொடியே 'ரர்ர்ர்ர்........ர்ர்ர்ரர்ர்ர்ர்' என அவன் அலைபேசி அருகில் இருந்த மேஜை மீது அதிர்வலைகளை பரப்பிக் கொண்டிருந்தது. அப்பாவிடம் இருந்து அழைப்பு.
அழைப்பை ஏற்று 'சொல்லுப் பா என்ன விஷயம்?' என கேட்டான்.
'ராமு, பாட்டியோட உடல் நிலை ரொம்ப மோசமா இருக்கு. நீ உடனே புறப்பட்டு வீட்டுக்கு வா' பதட்டத்துடன் சொன்னார் வெங்கடேசன்.
'என்னப்பா ஆச்சி?'
'திடீர்ன்னு நேத்து மதியம் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. அதுக்கப்புறம் பேச்சு மூச்சே இல்லாம போயிடிச்சி. டாக்டர் வந்து பார்த்துட்டு, நாடி எல்லாம் தளர்திடுச்சி இனிமே சிரமம்ன்னு சொல்லிட்டார். இப்போதைக்கு அப்பப்ப கண்ணை திறந்து பாக்கறாங்க. உன்னைத்தான் தேடுறாங்கன்னு நினைக்கிறேன். உடனே புறப்பட்டு வா' என தாழு தழுத்த குரலில் சொன்னார்.
'இதோ இப்பவே கிளம்பறேன்.' என்று சொல்லிவிட்டு ஊருக்கு புறப்பட்டான்.
5 மணி நேர பயணத்தில் வீட்டை அடைந்தான். மரணப் படுக்கையில் இருந்த பாட்டியை பார்த்து மிகுந்த வேதனைக்கு உள்ளானான். அருகில் உட்கார்ந்து பாட்டியின் கையை பிடித்தான். பாட்டியின் உடல் லேசாக சிலிர்த்தது. மெதுவாக கண்ணைத் திறந்தாள். ராமுவை பார்த்ததும் அவள் கண்களில் நீர் கசிந்தது. ராமு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சில நொடிகளில் அவள் கண்கள் அங்கும் இங்குமாக சுழன்று வேறு யாரையோ தேடியது. அப்பா அம்மா என மொத்த குடும்பமும் அங்கேத் தான் இருந்தது. அப்படி இருந்தும் யாரைத் தேடுகிறாள் என்பது யாருக்கும் புரியவில்லை.
சிறிது நேரத்தில் தகவலறிந்து குமாரும் வீட்டை வந்தடைந்தான். உள்ளே நுழைந்து கொண்டே 'பாட்டிக்கு என்ன ஆச்சி?' என பதட்டத்துடன் கேட்டான். வெங்கடேசன் அவனுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். எப்பொழுதும் புன்னகை மாறாத குமார் முகத்தில், அப்படி ஒரு பதட்டத்தை யாருமே பார்த்தது இல்லை. குமார் பாட்டிக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தான். மறு பக்கத்தில் ராமு அமர்ந்திருந்தான்.
குமாரின் வருகையை அறிந்தால் போல், பாட்டியின் உடல் மீண்டும் சிலிர்த்தது. மெல்ல கண்களை திறந்தாள். முதலில் குமாரைப் பார்த்தால், லேசாக கண்களை சுழற்றி ராமுவைப் பார்த்தல். இருவரது கைகளையும் பற்றினாள். அவள் இரு பிடிப்பிலும் ஒரு அழுத்தம் இருந்தது. அந்த அழுத்தம் ராமுவுக்கு பல அர்த்தங்களை உணர்த்தியது.
அறத்துப் பால் நின்று
அவனடி தொழுதோனே மேலோன்
கல்வெட்டில் இருந்த வரிகள் அவன் நினைவுக்கு வந்தது. அவள் முன்பே உணர்ந்துவிட்டாள், நான் தான் தாமதமாக உணர்ந்திருக்கிறேன் என்பது அவனுக்கு புரிந்தது.
அடி பட்டதில் அவள் உடல் ரீதியாக பலவீனம் அடைய வில்லை, மனதளவில் பலவீனம் அடைந்திருக்கிறாள் என்பதும் அவனுக்கு புரிந்தது.
ஏதோ சிறு வயதில் விஷ விதை விதைத்து விட்டோமே, சரியாகுமா? என்ற குற்ற உணர்ச்சி ஏதும் இல்லாமல், இதோ மரணப் படுக்கையில் அனைத்தையும் உணர்த்திவிட்டாள் என் பாட்டி. எங்கள் இருவரையும் ஒன்று சேர்த்து விட்டாள், என மனதில் நினைத்துக் கொண்டான் ராமு.
பாட்டியின் முகத்தில் பிரகாசம் தெரிந்தது. அவள் கண்களில் இப்போது எந்தத் தேடலும் இல்லை. அவள் உள்ளம் நிறைவு அடைந்திருந்தது. குமாரைப் பார்த்துக் கொண்டே தலையை சாய்த்தாள்.
அவனடி தொழுதோனே மேலோன்
அவனே நின்பாத மடைவான்
நிசப்தம்!
பாடலின் பொருள்: திருமாளின் தலையில் இருந்து பிறந்த குலத்தினர், விலா எலும்பில் இருந்து பிறந்த குலத்தினர் மற்றும் வயிற்றில் இருந்து பிறந்த குலத்தினர் தம் தம் பிறவிக் கடைமைகளை செய்துகொண்டிருக்கையில், இந்த பூமி சுத்தம் சுகாதாரமற்று போனது. இனி மனிதர்களே வாழ முடியாது என்ற நிலையை அடைந்த போது, மேற்சொன்ன மூன்று குலத்தவரும் திருமாளின் பாதங்களை அடைந்தனர். அவர்கள் வேண்டுதலை ஏற்று அவர்கள் தொட்டு வணங்கிய பாதங்களை கொண்டே, பூமியை சுகாதாரமாக வைத்துக்கொள்ள ஒரு இனத்தை படைத்தார். சேவையே நோக்காக பிறந்த அந்த இனத்தவரை, தைத் திருநாளான பொங்கல் அன்று, அறத்துப் பால் வழியே நின்று போற்றி வணங்கி நன்றி கூற வேண்டும். அவ்வாறு செய்தவனே இறப்பில் முக்தி அடைவான். செய்யாதவன் ஒரு போதும் முக்தி அடைய மாட்டான்.
Comments