இப்படை தோற்கின்?


நம்ம கோபியும் அவனோட ஏழு நண்பர்களும் தான் அந்த எட்டு பேர் படை. எட்டாவது வரைக்கும் இவங்க எட்டு பேரும் ஒன்னாத் தாங்க படிச்சாங்க. முதல் வகுப்புல இருந்து எட்டாவது வரைக்கும் இவங்கதான் முதல் எட்டு ரேங்க் எடுப்பாங்க. வேற யாரையும் நுழைய விட மாட்டாங்க. அவ்வளவு நல்லா படிப்பாங்க. இவங்களோட எட்டாம் வகுப்பு கணக்கு வாத்தியார் ராஜரத்தினம் என்ன சொல்றாருன்னு கேட்போம். “பசங்களா, இந்த எட்டு பேரையும் பார்த்து நீங்க நிறைய கத்துக்கனும். இவங்க இலக்கை அடயனும்ன்னு வெறியோட ஓடறாங்க. சரியான பாதைல போய்க்கிட்டு இருக்குற இவங்களுக்கு கண்டிப்பா வெற்றி நிச்சயம். நான் இன்னைக்கு சொல்றேன், எழுதி வெச்சுக்கோங்க இந்த எட்டு பேரும் மிக உயர்ந்த இடத்தை அடைவாங்க!” ன்னு  ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு மத்த பசங்க கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு. அதை கேட்டுட்டு நம்ம நண்பர்கள் ஒருத்தர் மாத்தி ஒருத்தர பார்த்து பெருமை பட்டுக்கிட்டாங்க. மத்த பசங்க எல்லாம் ஆச்சர்யமாவும், ஏக்கத்தோடயும் அவங்கள பார்த்தாங்க. அதுல மூணாவது வரிசையில உட்கார்ந்திருந்த மைனர் மகன் மணி, வாயில ஈ போறது கூட தெரியாம ஆ-ன்னு பார்த்துக்கிட்டு இருந்தான்.

நல்லபடியா எட்டாவது முடிச்ச அவங்க ஒன்பதாவதுளையும் ஒன்னாவே படிச்சாங்க. நம்ம படையில இருக்குற ஒசரமான பையன் ஆண்டியப்பன். அவன பார்த்து, “ஏலே ஆண்டி, கொழாய் எல்லாம் போட்டுக்கிட்ட, மீசை எல்லாம் வந்துடுச்சி, நீ பெரிய ஆண்பிள்ளை ஆயிட்ட டா”” ன்னு எதிர் வீட்டு பொக்கை வாய் பாட்டி சொல்ல. நம்ம ஆண்டியப்பன் அரும்பு மீசையை தடவிகிட்டே, தமிழ் படங்கள்ல வர்ற ஆண்பிள்ளைகளை போல (அட, நம்ம சினிமா ஹீரோஸ் மாதிரிங்க) அவனையும் நெனச்சிக்கிடான். ஒருநாள், தமிழ் வாத்தியார் மு.க.பா.வானரவேந்தன், யாரையோ பிரம்பால அடிச்சிக்கிட்டு இருந்தாரு. அதைப் பார்த்து ஆவேசப் பட்ட ஆண்டியப்பன், கல்லால அடிச்சி அவர் மண்டையை உடச்சிட்டான். அந்த கோபத்துல ஐயா மு.க.பா.வானரவேந்தன், அவனை ஒன்பதான் வகுப்புல பெயில் ஆக்கிட்டாறு. அதுக்கப்புறம் அவன் பக்கிரி பெரியசாமி மகன் சின்ன பக்கிரி கூட சேர்ந்து, சினிமா ஹீரோ மாதிரி, விசுவாச ரவுடி நண்பனா மாறிட்டான்.

“ஒருத்தன் போனா என்ன, நாம ஏழு பேரும் கண்டிப்பா உயர்ந்த இடத்தை அடைவோம்.” சபதம் செஞ்சிட்டு, அன்னாந்து பார்த்தாங்க. ஒரு தெருவுல வரிசையா எட்டு கரண்ட் கம்பம் இருந்துச்சி. இவங்க எட்டு பேரும் ஒவ்வொரு கம்பத்துமேல இருக்குற மாதிரியும், ஒவ்வொருத்தன் தலைக்கு மேல லைட் எரியற மாதிரியும் கற்பனை பண்ணிக்கிட்டாங்க. அதுல ஆண்டியப்பன் மட்டும் ஷாக் அடிச்சி கீழ விழுந்த்திடறான்.

இப்ப அந்த எட்டு பேர்...ஓ! இல்லை இல்லை, ஏழு பேர் படை, பத்தாவது படிக்க போனாங்க. ஏழு பேரும் இஷ்டப்பட்டு படிச்சி, பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணிட்டாங்க. என்ன ஆச்சர்யம், மாவட்டதுலையே முதல் ஏழு ரேங்க இவங்க புடிச்சிருந்தாங்க. ஏழு கம்பத்துளையும் விளக்கு பிரகாசமா எரிஞ்சிகிட்டு இருந்துச்சி.     

எதிர் பார்த்த மாதிரியே ஏழு பேரும் ஒன்னாவே +1ல சேர்ந்தாங்க. இத்தனை வருஷமா பாடுபட்டு ஒருவழியா பத்தாவதுல நல்ல ரேங்க் எடுத்தாச்சி. இந்த  வருஷம் மட்டும் ஜாலிய இருந்துட்டு +2ல நல்லா படிக்கலாம்ன்னு பேசிக்கிட்டாங்க நம்ம ரமேஷும் சுரேஷும். நம்ம கோஷ்டில குள்ளமா குண்டா, கறுப்பா ஒருத்தனும் அதே மாதிரி வெளுப்பா இன்னொருத்தனும் சேர்ந்தே சுத்துவாங்களே, அவனுங்க தான். ஜாலியா இருக்கலாம்ன்னு மங்களம் தியேட்டர் போய் அப்பிடி இப்பிடி படத்தை பார்க்கக ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி மகளிர் மேல் நிலைப் பள்ளி வாசல்ல நின்னு பொண்ணுங்கள கரக்ட் பண்ண ஆரம்பிச்சாங்க. அதுல சில வெற்றி தோல்விகளை சந்திச்ச அவங்க, சில பல செருப்படிகளையும் தாண்டி, டீச்சர கரக்ட் பண்ற அளவுக்கு முன்னேரிட்டாங்க. மத்த அஞ்சு பேரும் எவ்வளவு சொல்லியும் படிக்காம மன்மத லீலையை தொடர்ந்துகிட்டே இருந்தாங்க. கரண்ட் கம்பங்களில் இருந்த ரெண்டு லைட்ல வெளிச்சம் குறைய துவங்கிச்சி. +2 ரிசல்ட் வந்ததும் அதுவும் பியுஸ் போயிடுச்சி.

கதையில பெரிய ட்விஸ்ட் ஒன்னும் இல்லைங்க. நம்ம நினைச்ச மாதிரியே மத்த அஞ்சு பேரும் ரொம்ப கஷ்டப்பட்டு +2ல முதல் அஞ்சு ரேங்க் வாங்குனாங்க. என்னடா பத்தாவதுல இஷ்டப்பட்டு படிச்சவங்க இப்ப கஷ்டப்பட்டு படிச்சிருக்காங்கலேன்னு கேட்குறீங்களா? எல்லாம் மூணு விக்கெட் விழுந்த சோகம்தாங்க. அஞ்சுபேரும் ஒன்னாவே பொறியியல் கல்லூரியில சேர்ந்தாங்க.

ஒல்லிக்குச்சி நாராயணன சீனியர்ஸ் எல்லாம் சேர்ந்து ஓட்டுனாங்க. சீனியர் சிங்காரம், “பார்க்க பல்லி மாதிரி இருக்கியே, இந்த அல்லி மார்க் பீடியை பிடிடா”” ன்னு ரேக்கிங் பண்ண, ஒரே இழுப்புல மூச்சடச்சி பொத்துன்னு விழுந்துட்டான். அதை பார்த்து  சுத்தி நின்ன பொண்ணுங்க எல்லாம் சிரிக்க, அவனுக்கு ரொம்ப அவமானமா போச்சு. அன்னைல இருந்து ஒரு நாளைக்கு நாலு கட்டு அல்லி பீடியை பிடிக்க ஆரம்பிச்சான். அதுமட்டும் மட்டும் பத்தாதுன்னு பாக்கெட் சாராயம், பாட்டில் சாராயம்ன்னு நாளுக்கு நாள் அவனோட கெத்து கூடிக்கிட்டே போச்சு. கொஞ்சம் கொஞ்சமா கரண்ட் கம்பத்தோட அடிப் பகுதில துரு புடிக்க ஆரம்பிச்சிடுச்சி. ரெண்டு மாசத்துல ஒல்லிக்குச்சி நாராயணன், சீனியர் சிங்காரத்தை ரேக் பண்ற அளவுக்கு வளந்துட்டான். முதல் செமஸ்டர் ரிசல்ட் வந்துச்சிங்க, நம்ம நாத்தம் புடிச்ச நாராயணன் (அதே ஓல்லிகுச்சி நாராயணன் தான், இப்பிடி ஆயிட்டான்.) கணக்கு பாடத்தைத் தவிர மத்த எல்லாத்துலயும் பெயில். புரியுதுங்க, வழக்கமா எல்லாரும் கணக்குல தானே பெயில் ஆவாங்க, இவன் அதுல மட்டும் பெயில் ஆகலியே, எப்படின்னு தானே கேட்கறீங்க? கணக்கு பரீட்ச்சை அன்னைக்கு புல் மப்புல நாத்தம் புடிச்ச நாராயணன் மட்டை ஆயிட்டான். அந்த பரீட்சைய அவன் எழுதவே இல்ல. அதனால தான் அதுல மட்டும் அவன் பெயில் ஆகல. கரண்ட் கம்பம் மொத்தமா துரு புடுச்சி கம்பமே சாஞ்சிடுச்சி. மத்த நாலு பேரும் எவ்வளவோ முயற்சி பண்ணியும் திரும்ப நிறுத்தவே முடியல. கடைசில ரெண்டாவது வருஷ பாதியிலேயே அவன கல்லூரியில இருந்து டீபார் பண்ணிட்டாங்க.

நாலாவது விக்கட்டும் போச்சு. இத தடுக்கவே முடியாதுன்னு நீங்க ஆதங்க படுறது எனக்கு புரியுது. ஏன் முடியாது, இதோ வந்துட்டான் நம்ம அமுக்கி ஆடி தினேஷ். நின்னு விளையாடுறதுல அவனுக்கு நிகர் அவனேத்தான். நல்லா படிக்கறது மட்டும் இல்லைங்க, இவன் கிரிக்கெட்லயும் முத்திரையை பதிச்சான். தலைக்கு போற பந்தையும் அமுக்கி அடுச்சி பவுண்டரிக்கு அனுப்பிடுவான். எக்காரணத்தை கொண்டும் தூக்கி அடுச்சி விக்கெட விட மாட்டான். இப்ப புரிஞ்சிருக்கும் “அமுக்கி ஆடி” ன்ற பேர் அவனுக்கு எப்படி வந்துச்சின்னு. இவனோட வித்தியாசமான ஆட்டத் திறமையால அவங்க கல்லூரி அணி பல பதக்கங்களை ஜெயிச்சாங்க. கலோரி முதல்வர், பேராசிரியர்கள், சக-நண்பர்கள்ன்னு  கல்லூரியே அவன பாராட்டி தள்ளிட்டாங்க. அவனோட கம்பத்துல இருக்குற விளக்கு ரொம்ப பிரகாசம எரிஞ்சிகிட்டு இருந்துச்சி. இனிமே கிரிக்கெட் தான் எல்லாமேன்னு இருந்த அவன், பாடத்துல கோட்டை விட ஆரம்பிச்சான். அதைபத்தி யாருமே பெருசா கண்டுக்கல. அவனோட மத்த மூணு நண்பர்கள் கூட அத பெருசா எடுத்துக்கல. ஏதோ ஒரு துறையில உயரத்தை அடையப் போரானேனுன்னு அவனோட ஆட்டத்தை நினைச்சி பெருமை பட்டுக்கிட்டாங்க. அப்பத்தான் அந்த சம்பவம் நடந்துச்சி. எதிர் அணி வேகப் பந்து வீச்சாளன் வேங்கை வெற்றிவேல் அதி வேகமா பந்தை வீச. அதை தன் பாணியில கால்களை சுழற்றி அடிச்சான், அமுக்கி ஆடி தினேஷ். பந்து பவுண்டரிக்கு போச்சு, ஆனா சுழற்றி அடிச்சதுல அவனோட ரெண்டு காலும் எக்கு தப்பா சிக்கிக்கிச்சு. அந்த சிக்கை எல்லாம் நேராக்கி அவனை நடக்க வைக்கவே ஆறு மாசம் ஆயிடுச்சி. இனிமே கிரிக்கெட் விளையாடவே கூடாதுன்னு மருத்துவர் மார்கண்டேயன் ஸ்ரிக்டா சொல்லிட்டாரு. சோகமா கல்லூரிக்கு வந்தான்  தினேஷ். அவனோட ரிசல்ட பார்த்து  பேராசிரியர் கண்ணப்பன் கன்னா பின்னான்னு திட்ட, கல்லூரி முதல்வர் முத்தைய்யாவோ  “ஒழுங்கா பந்தை அடிச்சா மட்டும் பத்தாது, படிக்கவும் செய்யனும். இப்ப பந்தும் போச்சு, படிப்பும் போச்சு. நீயெல்லாம் வாழ்க்கையில எப்படி உருப்படபோற.” ன்னு வார்த்தைகளால காயப் படுத்தினாரு. இத்தனை நாலு நம்மள புகழ்ந்தவங்க எல்லாம், நம்மளால இனி லாபம் இல்லன்னு இப்படி புண் படுத்துராங்க, இது என்ன உலகம் டா ன்னு நொந்துக்கிட்டான். அதுலயே மனசொடஞ்சி போயிட்டான். லாரி மோதி அவனோட கம்பம் சாஞ்சிடுச்சி. அதுக்கப்புறம் பாடத்துலையும் சரியா கவனம் செலுத்த முடியாம ஏதோ கல்லூரிக்கு வந்தோம் போனோம்ன்னு மாறிட்டான். அப்பப்ப ஞானிய போல கருத்து எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டான். அவனோட நிலைமைய பார்த்து மத்த மூணு பேரும் வருத்தப் பட்டாங்க, பரிதாபப் பட்டாங்க, ஆறுதல் கூட சொன்னாங்க, ஆதுக்கு மேல அவங்களால ஒன்னும் பண்ண முடியல.

அடுத்தது கார்த்திக். தமிழ் சினிமாக்களை பார்த்து பார்த்து சலிச்சவங்க, பேரைக் கேட்டவுடனே ஓரளவு கதையை யூகிச்சு இருப்பீங்க. உங்க யூகமும் சரித்தான். இப்ப கதையை கேட்போமா. கொஞ்சம் பின்னாடி போய் ஆரம்பிக்கலாம். முதலாம் ஆண்டு கல்லூரிக்கு வந்த புதுசுல சூப்பர் பிகர் சுகன்யா, அவன்கிட்ட டவுட் கேட்க வந்தா. பொண்ணுங்கள பார்த்தாலே விலகிப் போற கார்த்திக், அவள பார்த்தும் ஒடுனான். அவளும் விடாம அவன துரத்த, தயங்கி தயங்கி பேச ஆரம்பிச்சான். நட்பு, நெருங்கிய நட்ப்புன்னு காலத்தோட சேர்ந்து அவங்க உறவும் நெருங்கிக் கிட்டே போச்சு. ரெண்டாம் வருஷ இருதியில இவங்க காதலர்களாகவே ஆயிட்டாங்க. ஒரு நாள் சூப்பர் பிகரு சுகன்யா ஓ-ன்னு அழுதுகிட்டு இருந்த. என்னன்னு கேட்டா “பொண்ணுங்க எல்லாம் ஏண்டி எப்ப பார்த்தாலும் கார்த்திக்ன்ற பையனையே காதலிக்கறீங்கன்னு, என் நண்பர்கள் எல்லாம் கிண்டல் பண்றாங்க.” ன்னு சொல்லிட்டு  மறுபடியும் அழுவுறா. அத தாங்க முடியாத கார்த்திக், உடனே அவனோட பேரை “காதல் கிருக்கன்னு” மாத்திக் கிட்டாங்க. ரேஷன் கார்ட், பாஸ்போர்ட், பள்ளிச் சான்றிதழ்ன்னு, கால் கடுக்க வரிசையில நின்னு, எல்லாத்துலயும் பெயர் மாற்றம் செஞ்சிக்கிட்டான். இவன் தந்த பயிற்சியால சுகன்யா ரேங்க் ஹோல்டர் ஆயிட்டாங்க, ஆனா இவனோ காதல் மயக்கத்துல பாடத்த கோட்டை விட்டுட்டான். இவனோட மார்க் குறைஞ்சி போகவே “நீ ஏன் இப்பிடி பொறுப்பே இல்லாம சுத்துற. நீ மாறவே மாட்டியா” ஆ-ஊ-ன்னு சண்டை போட ஆரம்பிச்சுட்டா சுகன்யா. காதல்ல ஊடல் சகஜம்ன்னு நெனச்சி அத பெருசா எடுத்துக்குல நம்ம காதல் கிறுக்கன். “குடும்பத்துல ஒருத்தர் படிச்சா போதும். அதான் நீ நல்லா படிக்கறியே, நான் வேற எதுக்கு கஷ்டப்பட்டு படிக்கனும்”ன்னு சப்பை கட்டு கட்டிகிட்டு திரிஞ்சான். கொஞ்ச நாளுக்கு அப்புறம், “எவ்வளவு சொல்லியும் நீ திருந்துற மாதிரி தெரியல. எனக்கு வேற வழி தெரியல. அதனால எங்க அப்பா, அம்மா பார்த்த பையனையே கல்யாணம் பண்ணிக்க போறேன்னு” கல்யாண பத்திரிகையை நீட்டினா. மின்னல் தாக்கி கரண்ட் கம்பம் கருகிடுச்சி. அதிர்சியில இருந்து மீண்டு, பத்திரிகையை பார்த்த அவன், மயக்கமே போட்டு விழுந்துட்டான். அதுல அப்படி என்ன இருந்துச்சி? “சுகன்யா B.E வெட்ஸ் கார்த்திக் USA” ன்னு இருந்துச்சி.

தெருவுல ரெண்டு விளக்கு மட்டும் பிரகாசம எரிஞ்சிகிட்டு இருந்துச்சி. இத்தனை இன்னல்களையும் தாண்டி, ரெண்டு பேராவது யுனிவர்சிட்டி ரேங்க் வாங்குனதுல பெருமை பட்டுக்கிட்டான் படிப்ஸ் பாஸ்கர். ரெண்டு பேருக்கு ஒரே நிறுவனம் “மன்னார் கம்பனீஸ்”ல, வேலை கிடைச்சதுல அவனுக்கு ரெட்டிப்பு சந்தோஷம். புது வேலையில திறமையை நிரூபிக்க, இரவு பகல் பார்க்காம வேலை செஞ்சான் படிப்ஸ் பாஸ்கர். அதை பார்த்த மேலாளர் மேகநாதன், “நல்லா வேலை செய்யுற, நீ கண்டிப்பா பெரிய ஆளா வருவ” ன்னு சொல்ல, அவன் இன்னும் சுருசுருப்பாயிட்டான். மேலாளர் மேகனாதனும் அவனுக்கு நிறைய வேலையை கொடுத்துக்கிட்டே இருந்தாரு. ஆண்டு இறுதியில சம்பள உயர்வுக்காக, ஒவ்வொருத்தரோட திறமை எண்ணை அளந்தாங்க. முதல் இடத்துல தான் இருப்பேன்னு உறுதியா இருந்தான் படிப்ஸ் பாஸ்கர். “பாஸ்கர், நீ இன்னும் நிறைய கத்துக்கனும். கஷ்டப்பட்டு வேலை பார்க்குற, இல்லைன்னு சொல்லல. ஆனா உனக்கு புத்திசாலித் தனமா வேலை செய்யத் தெரியல. அதனால இந்த வருஷம் நீ கடைசி இடத்துல இருக்குற” ன்னு மேலாளர் மேகநாதன் சொல்ல, புயல் அடிச்சி கம்பம் சாஞ்சிடுச்சி. அதை கொஞ்சமும் எதிர் பார்க்காத படிப்ஸ் பாஸ்கருக்கு கோபம் தலைக்கு ஏறிடுச்சி. “போடா சொட்டத் தலையா, நீ எல்லாம் ஒரு ஆளுன்னு நீ சொன்ன வேலை எல்லாம் செஞ்சேன் பாரு, எனக்கு இதுவும் வேணும், இன்னும் வேணும். ஏன் கண்ணு முன்னாடி நிக்காத. எனக்கு வர்ற கோபத்துக்கு இந்த பேனாவாலையே உன் மண்டையை குத்தி ஓட்டை போட்டிடுவேன்.” ன்னு படிப்ஸ் பாஸ்கர் பேனாவை ஓங்க, மேலாளர் மேகநாதன் குய்யோ முரையோன்னு கத்திக்கிட்டு ஓட ஆரம்பிச்சவரு தான், நாலு தெரு தாண்டி இருக்குற குட்டையில போய் விழுந்துட்டாரு. அதோட சரி, படிப்ஸ் பாஸ்கருக்கு ஒழுக்கம் கெட்டவன்னு சர்ட்டிபிகேட் கொடுத்து அனுப்பிட்டாங்க. அன்னைல இருந்து இன்னும் வேலை தேடிகிட்டே தான் இருக்கான்.           

கடைசியில நம்ம ஹீரோ எக்கச்சக்க கோபியை மறந்துட்டோமே. ஒத்த ஆளா நின்னு எல்லாத்தையும் தாண்டி நம்ம எக்கச்சக்க கோபி வளர்ந்துகிட்டே போனான்.  மேலாளர் மைக் மாது, ஜி.எம் ஜிம் பாடி ஜி.கே, வி.பி. மீசை வழிச்ச வீராச்சாமின்னு எல்லாரும் எக்கச்சக்க கோபிய தலைல தூக்கி வெச்சு கொண்டாட, அவனும் வருஷத்துக்கு ஒரு பதவி உயர்வு வாங்கி, அஞ்சு வருஷத்துல மன்னார் கம்பனி மாசு சுத்தப் பிரிவு மேலாளர் ஆயிட்டான். நம்ம எக்கச்சக்க கோபிக்கு ஒரு மைண்ட் வாய்ஸ் கேட்க்குது  : எட்டாம் வகுப்பு கணக்கு வாத்தியார் ராஜரத்தினம்: “...எழுதி வெச்சுக்கோங்க இந்த எட்டு பேரும் மிக உயர்ந்த இடத்தை அடைவாங்க...” அப்படியே அவன் கற்பனைல, தெருவுல ஒடஞ்சி, வளஞ்சி, எரிஞ்சி இருக்குற கரண்ட் கம்பங்க தெரியுது. புயல் வந்து ஓய்ஞ்ச இடம் மாதிரி இருந்துச்சி. அதுல அவனோட கம்பம் மட்டும் பெருசா இன்னும் பிரகாசமா எரிஞ்சிகிட்டு இருந்துச்சி.” அத நெனச்சி அவன்  பெருமை பட்டுக்கிட்டான். எக்கச்சக்க கோபிக்கும்,  காந்தக்கண் காமினிக்கும் மார்கழி மாசம் மாசிபுரம் மாரி மண்டபத்துல மா இலை தோரணம் கட்டி கல்யாணம் நடந்துச்சி. ரெண்டு பேரும் சந்தோஷமா தேன்நிலவுக்கு போனாங்க.  “மாமா நீ தண்ணி, தம் அடிச்சிருக்கியா?” ன்னு காமினி கேட்க, பதரிப் போய் “எட்டு பேரு குல சாமி  எங்க கணக்கு வாத்தியார் ராஜரத்தினம் மேல சத்தியமா தண்ணியும் தம்மும் அடிச்சதில்லை” ன்னு அடிச்சிச் சொன்னான் எக்கச்சக்க கோபி., “நானும் அடிச்சதில்லை மாமா. நாம ஏன் ஒரு தடவை ட்ரை பண்ண கூடாது? ஒரு தடவை மட்டும்.” பட்டுன்னு கேட்டுட்டா காமினி. அத கேட்ட நம்ம கோபி ஷாக் ஆகி நிக்க, காமினி பயந்து போய் தலையை தொங்க போட்டா. கோபி மெதுவா வாயை திறந்து ஈ-ன்னு இளிச்சான். அடுத்த சீன்ல நிழல்கள் மட்டும் தெரியுது. புருஷனும் பொண்டாட்டியும் சீமை சரக்க மிக்ஸ் பண்ணிக்கிட்டே பேசறாங்க. “மாமா, இந்த ஒரே ஒரு தடவை மட்டும் தான். இதுக்கப்புறம் தொடவே கூடாது. சரியா?” “கண்டிப்பாடி செல்லம், இனிமேல் தொடவே மாட்டேன்.’ ன்னு சொல்லிகிட்டே ரெண்டு பேரும் சியர்ஸ் அடிச்சிக் கிட்டாங்க. நம்ம தெருவுக்கு லைன்-மேன் வராரு. யாருமே இல்லாத தெருவுக்கு எதுக்குடா லைட்டுன்னு மெயின் லைனயே புடுங்கிட்டு போயிட்டாரு.

என்னடா எல்லாரோட கதையும் இப்படி ஆயிடிச்சேன்னு வருத்தப் படுறீங்களா? இனிமேத்தாங்க கதையில பெரிய ட்விஸ்ட். ராமசாமி தாத்தா இருக்கறது தெரியாம லைன்-மேன் மெயின புடிங்கிட்டாரு. தாத்தா பதறாம, ஒரு திரி விளக்கை ஏத்தி வெச்சு, தெருவ பார்த்து சிரிச்சாரு. நம்ம நண்பர்கள் எல்லாம் இப்ப என்ன பண்றாங்கன்னு பார்ப்போம் வாங்க.

அட, ஆண்டியப்பன பாருங்க. பக்கிரியோடவே வளர்ந்து, இப்ப பெரிய அரசியல்வாதியா ஆயிட்டான். நடந்து முடிஞ்ச தேர்தல்ல நின்னு, தொகுதி எம்.எல்.ஏ. வே ஆயிட்டான்! ஊருக்கு உண்மையிலேயே நல்லது  பண்ணிக்கிட்டும் இருக்கான். என்ன? அவனுக்கு தேர்தல் பிரச்சார உரையை எழுதி கொடுத்தது யாருன்னு கேட்கறீங்களா? வேற யாரோ இல்லீங்க. தமிழ் ஐயா மு.க.பா.வானரவேந்தன் தான்!

மன்மத மயக்கத்துல இருந்து தெளிஞ்ச ராமஷும் சுரேஷும், நாடகங்கள்ள நடிக்க ஆரம்பிச்சாங்க. இப்ப சினிமாவுல பெரிய காமடி நடிகர்களா இருக்காங்க. மங்களம் தியேட்டர்ல இவங்க நடிச்ச படத்தைதான் இப்ப போட்டுக்கிட்டு இருக்காங்க.

நாத்தமெல்லாம் நீங்கி, பழைய ஒல்லிக்குச்சி நரசிம்மணா வந்தவன், சீனியர் சிங்காரத்தோட சேர்ந்து “சீனியர்ஸ் டுடோரியல் காலேஜ்” ஆரம்பிச்சான். இன்னைக்கு இந்தியாவுல இருக்குற பெரிய பெரிய கல்லூரிகளுக்கு உள்ள நுழைய, இவங்கதான் பெரிய வழிகாட்டி.

தத்துவங்களை பேசிக்கிட்டு திரிஞ்ச அமுக்கி ஆடி தினேஷ், அதையே புத்தகங்களா எழுதி பெரிய எழுத்தாளன் ஆயிட்டான்.

காதல் தோல்வியில, சோகப் பாட்டு பாடிகிட்டு திரிஞ்சான் காதல் கார்த்திக். அந்த பாட்டை கேட்டு, பார்வதின்னு ஒரு பொண்ணு, அவன காதலிக்க ஆரம்பிச்சா. அதுமட்டும் இல்லாம அவனோட குரலை உலகமே கேட்குற மாதிரி செஞ்சா. இன்னைக்கு அவன்தான் பாடல் உலகத்துல மெலடி கிங்.

வேலை எதுவும் கிடைக்காம “பாஸ்கர் கம்பனீஸ்” ன்னு சொந்தமா தொழில் தொடங்கினான் படிப்ஸ் பாஸ்கர். இன்னைக்கு மன்னார் கம்பனீஸ்க்கு இனையா வளர்ந்து நிக்குறான். இது யாரு? இவரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கா? மேலாளர் மேகநாதன் தாங்க. இப்ப பாஸ்கர் கம்பனீஸ் ஜி.எம்மா இருக்காரு.

சுற்றுப்புற மாசு சுத்தீகரிப்புல பல ஆராய்ச்சிகளை பண்ணி, பல தொழில்நுட்பங்களை உலகுக்கு அறிமுகப் படுத்தினான் நம்ம ஹீரோ எக்கச்சக்க கோபி. காந்தக்கண் காமினிகிட்ட சொன்ன மாதிரியே அதுக்கப்புறம் அவன் சரக்கு அடிச்சதே இல்லை.

நம்ம தெருவ சுத்தி புது காலனியை அமைச்சாங்க. இந்த எட்டு கம்பங்களை மட்டும் இல்லீங்க, ஏரியாவுல இருக்குற எல்லா கம்பங்களையும் சரி செஞ்சு, மின் விளக்கை பொருத்துனாங்க. காலனியே பிரகாசமா இருந்துச்சி. இதை எல்லாம் பார்த்துக்கிட்டே ராமசாமி தாத்தா சந்தோஷமா நம்ம தெருவுல நடந்து போறாரு.

மைண்ட் வாய்ஸ்: எனக்கு கேட்க்குது. உங்களுக்கும் கேட்க்கும்ன்னு நினைக்கிறேன்.

“இப்படை தோற்கின், எப்படை வெல்லும்.”

Comments

Thiru said…
nice da.... gud to see u trying ur hand at something different...
Thiru
murali said…
கதையோடு நகைச்சுவை இழையோடுவது அருமை :)
எழுத்து நடையில் ரசிக்கும்படியான, நல்லமாற்ற ம் உள்ளது. ஸ்டோரி நச்சுனு இருக்கு.

Popular posts from this blog

SINGLE TICK ✓ - A Mystery Chat

நானாகிப் போன நீ!

Alive is Awesome!