பிஞ்சில் நஞ்சு
' யாருப்பா இது ?' வீட்டுக்கு புதிதாக வந்திருக்கும் சிறுவனைப் பார்த்து அப்பாவிடம் கேட்டான் சிறுவன் ராமு. ' ராமு இவன்தான் குமார். இன்னைல இருந்து நம்ம மண்டில பொட்டலம் போட வந்திருக்கான். ' என மகனுக்கு அறிமுகம் செய்து வைத்தான் வெங்கடேசன். மிஞ்சிப் போனா ராமுவை விட 2 வயது அதிகமாக இருக்கும் அந்த சிறுவனுக்கு. நேற்று தான் ராமுவின் பத்தாவது பிறந்தநாள் கொண்டாடப் பட்டது. ராமுவைப் பார்த்து வெள்ளந்தியாக புன்னகைத்துக் கொண்டிருந்தான் அந்த அரை நிஜார் போட்டிருந்த சிறுவன் குமார். ராமுவும் பதிலுக்கு புன்னகைத்தான். ' யாரு இந்தப் பையன் புதுசா இருக்கான். நம்ம தெருவுல பார்த்ததில்லையே ?' கேட்டுக் கொண்டே பூஜை அறையில் இருந்து வெளியே வந்த பாட்டியிடம் , ' பாட்டி , இவன் பேரு குமார். நம்ம மண்டில வேலை செய்ய வந்திருக்கான். ' வேகமாக அவனுக்கு தெரிந்ததை சொன்னான். பாட்டி வெங்கடேசனை பார்க்க , ' நம்ம நெத்திலி தர்மலிங்கம் இருக்காரு இல்ல , அவரோட பேரன் மா. இவனோட அப்பன் வந்து இவனுக்கு வேலை ஏதாவது இருந்தா போட்டுக் கொடுக்க சொன்னான். ' அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே. '...